வியாழன், 12 ஏப்ரல், 2012

நல்ல எதிர்காலமும், லட்சியக் கனவுகளும்




 
 என் பிள்ளைக்கு வேண்டியதை தட்டாமல் வாங்கிக் கொடுக்கிறேன். ஆனாலும் அவன் மற்றவர்களைப்  போல் படிப்பதில்லை. மனநல மருத்துவரிடமும் சோதித்து விட்டேன்" எந்த குறையும் இல்லை என்றே  சொல்லுகிறார். ஆனாலும் வீட்டிற்கு வந்தால் சற்று நேரம் டிவி பார்க்கிறான். படி என்று  சொன்னபிறகு புத்தகத்தை எடுத்து விரித்து வைத்துக் கொள்கிறான். ஆனால், மார்க் என்னவோ  குறைவாக  இருக்கிறது. இவனை விட வசதி குறைவான மாணவர்கள் எல்லாரும் நன்றாகவே  படிக்கிறார்கள். இவனுக்கு மட்டும் படிப்பு மந்தமாகவே இருக்கிறது. இவனால் மற்ற சொந்தக்காரர்கள்  முன் என்னால் தலைக்காட்டவே முடியவில்லை.என்று புலம்பும் பெற்றோர்களின் மத்தியில்  பிள்ளைகள்  பெற்றோர்களின் சில அஜாக்ரதையின் காரணமாகவும், சில வற்புறுத்தல்களின்  காரணமாகவும் அவர்கள் தேர்வில் தோல்வியை தழுவுகிறார்கள். இதன் முடிவு வாழ்க்கையை  எதிர்கொள்ளும் தைரியமின்றி வாழ்க்கையை முடித்துக்கொள்ள தீர்மானிக்கிறார்கள்.விளைவு  தற்கொலையில் கொண்டு போய் தள்ளி விடுகிறது.
மாணவர்களுக்கு என்ன பிரச்சினை? வாழ்க்கையில் அவர்களை அச்சுறுத்துவது எது? ஏன்  வாழ்க்கையை எதிர்கொள்ள மனமின்றி ஓடி ஒளிந்து கொள்ள முயல்கிறார்கள். அடிப்படையில் எங்கே  தவறு நிகழ்ந்தது?இது ஆரம்பித்தது எப்போது? ஏன்?
இப்படி சில கேள்விகளுக்கு விடை காணமுற்பட்டால் இதற்குக்  காரணம் வளர்க்கும் முறையில்  திடீரென ஏற்ப்பட்ட தலைகீழ் மாற்றம் தான் என்பது தெளிவாகிறது. குழந்தைகள் எது கேட்டாலும்  மறுநிமிடம் வாங்கிக்கொடுக்கும் இயல்பு  இப்போதைய பெற்றோரிடம் இருக்கிறது.  இது  குழுந்தைகளுக்கு அடைய முடியாத எதுவும் இருக்கக்கூடாது என்று எண்ண வைத்திருக்கிறது.  என்ன  தவறு செய்தாலும் கண்டிக்கும் வழக்கமோ, தண்டிக்கும் பழக்கமோ கிடையாது. இதனால்,  குழந்தைகளுக்கு பிறர் கண்டித்தால் தாங்கிக் கொள்ளும் மனநிலை இல்லாமல் போய்விடுகிறது.
முன்பெல்லாம் என்பிள்ளை . உங்கள் பிள்ளை மாதிரி எப்படியாவது இவனை நல்வழிப் படுத்துங்கள்   என்று ஆசிரியர்களிடம் சொல்லிப் போவார்கள். இப்போதெல்லாம் ஆசிரியர் கொஞ்சம்  அதட்டிப்பேசினாலும் , ""என்பிள்ளை மன அழுத்தத்தில் இருக்கிறான். அவனை ஏன் சார் திட்டறீங்க ''  என்று மாறுநாளே வந்து கேட்டு நிற்கிற பெற்றோர்கள் தான் அதிகம்.
நீ கேட்டதெல்லாம் தட்டாமல் வாங்கி கொடுத்து விடுகிறேன்.  எது வேண்டுமானாலும் செய்து கொள்  மார்க் மட்டும் வாங்கு என்று  அந்தக்குழந்தையின் திறமைக்கு மீறி எதிர்ப்பார்க்கும்  பெற்றோர்களின்  மனநிலை தான் குழந்தைகளை இப்படி வாழ்க்கையிலிருந்து  வெளியை விட்டுத் துரத்துகிறது. பெற்றோர்களின்  அதிகமான நேரம் சுயவாழ்க்கையின் தேவைக்கே அதிகமாக பங்கு போட்டுவிடப்படுவதால்   குழந்தைகள் தங்களின் மனத்தாங்கல்களை வெளியே காட்டிக்கொள்ளாமல் அடைத்து வைத்துத் ஒரு  கட்டத்தில் சுதந்திரபறவைகளாய் வீட்டைவிட்டு ஓட முயற்சிக்கிறார்கள். அப்படி ஓடி மீண்டும் வீட்டில் கொண்டு வந்து சேர்க்கிற போது மீண்டும் பழைய சூழ்நிலையை எதிர்கொள்ள பயந்து  தற்கொலைக்கும்  முயல்கிறார்கள்.
இன்னும் சில பெற்றோர்கள் எப்போதும் ""அவனைப்போல் படி , இவனைப்போல நீச்சலடி.  அவனைப்போல் விளையாடு என்று மற்ற வர்களை உதாரணம் காட்டியே தங்கள் குழந்தைகளை  மட்டம் தட்டுவது போலவே நடந்து கொள்கிறார்கள். அத்துடன் மார்க் குறைஞ்சு  வாங்கிடாதேடா.அம்மா வெளில தலைகாட்ட முடியாதுடா. என்கிறார்கள்.  இது  அவனது மன அழுத்தத்தை  அதிகப் படுத்தவே செய்யும். 
 பெற்றோர்கள் தான் அதிகம் படிக்க வில்லை, பிள்ளைகளாவது  நன்றாக படிக்கட்டும்  என்று  ஆசைப்படும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நல்ல பள்ளிகளில்,   இன்ஜினியரிங்  கல்லுõரிகளுக்கு செய்யும் செலவுகளுக்கு ஈடாக செலவு செய்து  படிக்க வைத்து ,பரிட்சை முடிவுகளை  எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.  நம் பிள்ளை என்ன மார்க் எடுப்பான் ? அடுத்து  என்ன படிக்க  வைக்கலாம் ?  எவ்வளவு  செலவாகும்  என்று  மனக்கணக்கு போட்டு, கனவுகண்டு  எதிர்பார்த்தும்  காத்திருக்கையில் தங்கள்  பிள்ளைகள் மார்க் எடுக்க வில்லை. பரிட்சையிலும் தேர்ச்சி  அடையவில்லை என்றால் , எந்த ஒரு  பெற்றோருக்கும் கோபம் வரவே செய்யும். அப்படி வருகிற  கோபத்தாலும், அதன் விளைவுகளை பெற்றோர்களும்,  பிள்ளைகளும்  உணராததால் பல  விளைவுகளைச்சந்திக்கவே செய்கிறார்கள். அப்படி பெற்றோர்களுக்கு கோபம் வரும் போது அவர்கள்   இவ்வளவு செலவு செஞ்சு படிக்கவெஞ்சு என்ன பிரயோசனம், எடுத்திருக்கிற மார்க்கை பாரு  வெளியே தலைகாட்ட முடியுதா? எதுக்காச்சும் துப்பிருக்கா? என்று தலையில் அடித்து  தள்ளிவிடுகிறார்கள். பிள்ளைகள் மீது வெறுப்பு மனோபாவத்தையே காட்டுகிறார்கள். இதனால்  அவர்கள் மனம் உடைந்து இனி பெற்றோர்களும் நமக்கு ஆதரவாக இருக்கமாட்டார்கள். நமக்கு இனி  ஆதரவாக யாரும் இல்லை என்கிற மனோபாவத்தில் பெற்றோர்கள் திட்டும்போது அதற்காக மனம்  வருந்தி , மனம் குழம்பி  பல மாணவ, மாணவிகள்  எடுக்கும் முடிவுகள் தற்கொலை .
கடந்த ஆண்டில் மட்டும்  இந்திய அளவில் 259பேரும் , தமிழ்நாட்டில் மட்டும் 59 பேர்  இறந்திருக்கிறார்கள்.

பள்ளித்தேர்வில்  தோல்வியடைந்ததும்  அப்பா  சொல்லும்  முதல் வார்த்தை  " நீ என்ன லட்சணத்தில  படிச்சேன்னு  எனக்கு தெரியாது. இதான் பெயிலாகிட்டியே பேசாம எனக்குத் தெரிஞ்ச மெக்கானிக்  செட்டில சொல்லி விடுறேன்.சேர்ந்து வேலை கத்துக்கிட்டு நாலுகாசு சம்பாதிச்சு பிழைக்கற  வழியப்பாரு, பின்னாடி நீயே சொந்தமா தொழில் செய்! என்பதுதான்.    என் பிள்ளை, என் பிள்ளை னு  தலையில துõக்கி வெச்சிக்கிட்டு ஆடினே.  இப்ப வாங்கிட்டு  வந்திருக்கிற மார்க் பாரு. நீ தான்  மெச்சிக்கணும்.  இன்னைக்கு வந்திருக்கிற  பேப்பர் பாரு புரோட்டாக் கடையில  வேலை பார்த்தவன்  முன்னுக்கு வந்து நல்லமார்க்  எடுத்திருக்கிறான். நீ என்னத்தை கிழிச்சிருக்கே. என்னால  காலேஜ்க்கு   லட்சம் லட்சமா பணம் கட்டி  உன்னை படிக்க வெக்க முடியாது.என்பார்கள்.

பரிட்சையில் பெயில், மார்க் குறைவு, நான் என்ன குறை வைத்தேன்  என்று ஆதங்கப்படும்  பெற்றோர்கள் என்றைக்கேனும் அதற்குரிய  தீர்வு என்ன?  காரணம் என்ன  என்று  யோசித்திருக்கிறார்களா? வீட்டில் கேபிளையும் , வெளியூர் செல்வதையும் குறைத்துக்கொண்டு   விட்டால் தீரும் பிரச்சினைகளா இவை. பிள்ளைகளின்  மதிப்பெண் ஆண்டு இறுதித்தேர்வில் மட்டும்  குறைந்து விடவில்லை. அதற்கு முந்தைய கால், அரையாண்டுத் தேர்வுகள், மற்றும் மாதிரித்  தேர்வுகளிலும்  குறைந்து தான் இருந்தது. என் பிள்ளை என்று தட்டிக் கொடுத்து, செல்லம் கொடுத்தே  அவர்களை கெடுத்து வைத்து இருக்கிறார்கள். அதேப்போல  ரேங்க் கார்டுகளில்  அடுத்த தேர்விலாவது  நல்லமார்க் எடு என்று கையெழுத்து போடுவதோடு  மறந்துவிடுகிறார்கள் பெற்றோர்கள். மகன்  தொடர்ந்து நன்றாக படிக்கிறானா? என்ன செய்யலாம் என்று யோசிப்பதில்லை. பரிட்சையில்  அதிகமார்க் எடுக்க, நன்றாக படிக்க பல டிப்ஸ்களை ஊடகங்களும், பள்ளிகளும்  தருகின்றன.  அப்படியிருந்தும் தேர்ச்சி விகிதம் குறைந்திருக்கிறது. இதற்கெல்லாம் என்ன காரணம்? என்று அறிந்து  கொள்ள, முதலில்  சில மாணவர்களை சந்தித்தோம்.  படிப்பது கஷ்டமாக இருக்கிறதா ? என்றோம்.

 விஜய், இஸ்மாயில் , ஐதர் அலி, ராஜா, ஞான கந்தன், சுரேஷ், சுடர்வண்ணன். என்கிற  மாணவர்களை  சந்தித்து கேட்டோம்."படிப்புங்கறது கஷ்டமா இல்லை, சமயங்கள்ல பாட வகுப்புகள்  போரிங்கா  இருக்கு . இடைவெளி  இல்லாத  வகுப்புகள் சமயத்தில டீச்சர் சொல்லித் தர்றது புரியலை, சில  பாடங்களுக்கு உபகரணங்களை வெச்சு சொல்லித் தரணும் , வெறுமனே பார்த்து படிச்சு ஒப்பிக்கறது  சலிப்பாக இருக்கு. பிராக்டிக்கல்னு பேரு, சில உபகரணங்களை தொடக்கூட விடறதில்லை.  காட்டிட்டு பத்திரப்படுத்திடறாங்க. புரியலைன்னு திரும்பக் கேட்டா  எரிஞ்சு விழறாங்க. அவங்க  வீட்டுல, ஆபீஸ்ல , பள்ளிகூடத்தில  உள்ள கோபத்தை எங்க மேல காட்டறாங்க. இங்கே  பள்ளிக்கூடத்தில எல்லா பசங்களும் நல்லா படிக்கறவங்க இல்லை. வெவ்வேற விதமான புரிஞ்சுக்கிற  தன்மை இருக்கு. அதை டீச்சர்ஸ் புரிங்சுக்கிறது  கிடையாது. அறுபது மாணவர்கள் ஒரு கிளாஸ்ல  இருக்காங்கன்னா எல்லோருக்கும் பொதுவா கிளாஸ் எடுத்தா  எப்படி? கடைசி பெஞ்சிலயும் படிக்கிற  பசங்க இருக்காங்க.ஆனா, அவங்களை படிக்காதவங்க லிஸ்டல் சேர்த்திடறாங்க.  ஹோம் ஒர்க்ங்கற  பேர்ல இருபது முறை எழுதச் சொல்றாங்க.புரியாமல் படிக்கிற பாடத்தை இருபது முறை  எழுதறதில   என்ன புரிஞ்சிக்க  முடியும். டீச்சர் சொல்லித்தர்றது புரியலைங்கறப்போ,  இம் போசிசன் எழுதி  மொட்டை மனப்பாடம் பண்றதுல என்ன பிரயோஜனம்.அது எங்களுக்கு தண்டனையாக இருக்கு.   காலையில அஞ்சு மணிக்கு எழுந்திருச்சு, ராத்திரி  ஏழரை மணிவரையிலும் படிக்க வேண்டியிருக்கு.  அதுல காலையில எட்டு மணில இருந்து, மதியம் மூணு மணிவரைக்கும் ஸ்கூல். அப்பறம் அஞ்சு  மணிவரை ஸ்பெஷல் கிளாஸ்,அப்பறம் டியூசன். இதுல டியூசன்லயும் ஹோம் ஒர்க்,ஸ்கூல்லயும்  ஹோம்  ஒர்க்' அதே மாதிரி தனிப்பட்ட ஒரு பையனை பிடிக்கலைன்னா அவனை  மட்டுமே தினசரி  திட்டறது' . என்று தங்கள் மனக்குறைகளை கொட்டினார்கள்.

 பரிட்சை நெருங்கிய சமயத்தில்  தலைமை ஆசிரியர் ஒருவரை சந்திக்க காத்திருந்த   வேளையில்  சில  மாணவ, மாணவிகளை கண்டித்துக் கொண்டிருந்தார் . காரணம் ,"பரிட்சை நெருங்கிக்  கொண்டிருக்கிறது என்கிற பயமோ, அக்கறையோ இல்லாமல்  விளையாட்டுத் தனமாகவே  இருக்கிறார்கள்.  பரிட்சை பற்றிய , விழிப்புணர்வோ, மார்க் பற்றிய பயமோ இல்லாமல்  சினிமா,  கிரிக்கெட் நாயகர்களைப் பற்றி மெய்மறந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.கிராமங்களில் அதிகம்  படிக்காத பெற்றோர்கள்  பிள்ளைகள் படிப்பில் கவனம் செலுத்துவதில்லை.  கண்டு கொள்வதில்லை,  அதே சமயம் ஆசிரியர்கள்  மாணவர்களை  பாசாக்கி விட்டால் போதும் என்று எங்கள் தலையில் கட்டி  விடுகிறார்கள். என்று குறைபட்டுக் கொண்டார்.

மாணவர்கள் ஒவ்வொருவருக்கும்  ஒரேவகையிலான திறமைகள் இருப்பதில்லை.  ஒவ்வொருவருக்கும் ஞாபக சக்திகளில் அதன் விகித அளவுகளில் மாற்றங்கள் இருக்கிறது. அது  படிப்பின்  தரத்தை நிர்ணயிக்கும் முக்கிய பங்காக இருக்கிறது. இது போன்ற குறைகளை சரி செய்ய   பள்ளிகளிலோ,  வீடுகளிலோ சிறப்பான முயற்சிகள் எதுவும் எடுத்துக் கொள்ளப் படுவதில்லை.  பள்ளிக்கு அனுப்பிவிட்டால் ஆசிரியர் பார்த்துக்கொள்வார் என்று பெற்றோர்கள் தங்கள் பொறுப்பை  தட்டிக்கழித்து விடுகிறார்கள். அதிகமான ஞாபக சக்தியை வளர்ப்பதற்கு மாணவர்களுக்கு பயிற்சி  கொடுக்க  இம்போசிசன் என்கிற பெயரில் தரப்படும் பாடங்களை திரும்ப திரும்ப அதை ஒரு  கஷ்டமான வேலையாக நினைத்து மாணவர்கள் செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால்  படிப்பில் மந்தம்.இரண்டாவது காரணம் மாணவர்களுக்கு  படிப்பதும், எழுதுவதும் கசக்கும்  வேப்பங்காயாக இருக்கிறது. அதிகமான விளையாட்டிலும், வீடியோ கேமிலும் , செல் போன்  விளையாட்டுகளிலும் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.  அறுபது பேருக்கு ஒரு ஆசிரிய ர் என்கிற போது  தனிப்பட்ட ஒருத்தருக்கு ஆசிரியர் சிறப்புச்சலுகையை தரமுடியாது.அதே ஆசிரியர் படிக்கும்  மாணவர்களை கொண்டு குழு வகுப்புகளுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்து  அதன் மூலம் படிக்கும்  மாணவர்கள் வழிகாட்டுதலில் மற்றமாணவர்கள் நன்றாக படிக்க வாய்ப்பை ஏற்படுத்தித் தரலாம்.

எல்லாம் சரி,மரணத்தை தேடிக்கொள்ளும் மாணவர்களுக்கும் , அதிகமாக பெயிலாகும்மாணவர்களின்  சதவிகிதத்தைகுறைக்க வேண்டும்.படிப்பைக்கூட மீண்டும் தொடர்ந்து படித்து தேர்ச்சி  பெற்றுவிடலாம். படிப்புக்காக போன உயிரை மீட்க முடியாதில்லையா?என்பதற்கு  மனநல நிபுணர்  டாக்டர்  ருத்ரன் " தற்கொலை என்பது தோல்வியின் உந்துதல் . தோற்றவர்களிடம் பரிதாபம் அல்லது  கோபம் நமக்கு வரும் . இனியும் நாம் இருந்தால் நம்மை தொந்தரவு செய்து கொண்டே இருப்பார்கள். என்பதால் சட்டென அந்தமுடிவுக்கு ஆளாகிறார்கள். பல குழந்தைகள் ஏதாவது சிறு தவறு செய்திருக்கும். பள்ளியில் தண்டிப்பார்கள் அல்லது கண்டிப்பார்கள். மறுநாள், அதேபள்ளியில் அதே ஆசிரியர் மாணவர்களை எப்படி எதிர்கொள்வது, அவர்கள் கேலி கிண்டல் செய்வார்களே என்று அவமானத்திற்கு பயந்தும் இப்படிப்பட்ட முடிவுகளை எடுக்க நினைப்பார்கள். இதையும் பெற்றோர்களைப்பார்த்து கற்றுக்கொள்வது தான். இப்படிப்பட்ட கொடுமையை அனுபவிக்கறதுக்கு பேசாம மருந்து குடிச்சு செத்திடலாம். என்று வாழ்க்கையை பற்றிய பயத்தை வாழும் அவர்களே தன்னிடம் இருந்து பிள்ளைகளுக்கும் வளர காரணமாகிறார்கள். தற்கொலை  அந்தக்கணநேர முடிவு என்றாலும் மனச்சோர்வு அதற்கு முன்பே துõக்க மின்மை , நாட்டமின்மை  போல மெல்ல வெளித் தெரியும். அப்படிச் சோர்வுற்ற நபரை ஆறுதலாக தேற்றுவதே தற்கொலையைத்  தடுக்கும். இனி வாழ்ந்து  பயனில்லை என்று என்று நினைப்பவர்களிடம் இனி, வாழ்வதால் என்ன  என்ன சாத்தியங்கள் உண்டு. படிப்பதால் என்ன பயன்? தோல்வியுற்ற பாடங்களை அப்போதே  கவனமாக படிக்காததால் எவ்வளவு நேரம், காலம் விரயம்.  அடுத்த முறை மீண்டும் படிக்கிற போது  தன்னோடு படிக்கிற மற்ற மாணவர்கள் அடுத்த வகுப்புகளை தாண்டியிருப்பார்கள். என்று புரிய  வைக்க வேண்டும். அதே சமயம் கேட்டதை யெல்லாம் வாங்கித்தந்து குழந்தைகளை கெடுத்து விடவும் கூடாது.  வாழ்க்கையை பற்றிய நல்ல நம்பிக்கைகளை அவர்களுக்கு ஏ ற்படுத்தவேண்டும். படிக்காத பலர்  இங்கே சாதித்திருக்கிறார்கள்.ஆனால், அவர்களும் படிக்காததற்காக வருத்தப்பட்டிருக்கிறார்கள். என்று நம்பிக்கையாக சொல்லும் போது மாணவர்களுக்குள் தன்னம்பிக்கை  பிறக்கும்.என்றார்.

" சிநேகா' என்கிற தற்கொலை தடுப்பு நிறுவனத்தின் இயக்குனர் சாந்தியை சந்தித்தோம் .   மாணவப்பருவத்தில் பல பிரச்சினைகள் , பல குழப்பங்கள் எழும்,இதில் பருவத்திற்கான குழப்பம்,  பள்ளிப்பாடங்களில் புரியாமை, பள்ளிகளில், வகுப்புகளில், ஆசிரியர்கள் , சக நண்பர்கள் தரும் மன  நெருக்கடிகள் என்று ஒரு மாணவனது உணர்ச்சிகளை யாரும் புரிந்து கொள்வதில்லை, அவர்களிடம்  மனம் விட்டு பேசவும்முயற்சிப்பதில்லை, பிள்ளைகளின் பிரச்சினைகளை ஆறுதலாக கேட்டு  பல  பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு ஆறுதலாகவும்  இருப்பதில்லை என்பதை .எங்களுக்கு வரும் அதிகமான (044 2464 0050)   போன் கால்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது என்கிறார்.  பிள்ளைகள் நன்றாக படிப்பதற்காக  பூஜைகள் செய்கிறோம், ஆரோக்கியத்திற்காக  உணவுகளை தேடித்தேடித் தருகிறோம் . விரும்பியதை  வாங்கித்தரும் பெற்றோர்கள் நிச்சயம் பிள்ளைகள் தேர்வில் தோல்வியுறுவதற்கும்,  கொஞ்சம்  பொறுப்பேற்று, அடுத்து   பிள்ளைகளை எப்படி வாழ்க்கையில் வெற்றி பெற வைக்கலாம்  என்று  யோசிக்க வேண்டும் என்கிறார்.

சிறு புள்ளிவிபரம்:

இந்தியாவில் 2007ம்ஆண்டு 259பேரும் சென்னையில் மட்டும் 59 பேர் இறந்திருந்தனர். இந்தியாவில்  இதுவரை மாணவ,மாணவிகள்  தற்கொலை செய்து கொள்வதில் மேற்கு வங்கம் முதலிடத்தில்  இருந்தது. 2006 ம் ஆண்டு சென்னையில் மட்டும் நாற்பது பேரும், தமிழநாட்டில் 1043 பேரும், இந்திய  அளவில் 2283 பேரும் தற்கொலை செய்து கொண்டனர்  .

பெற்றோருக்கு சில  ஆலோசனைகள் :

* பள்ளிப்பருவத்தை  கடந்து வந்த பல பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள் அந்த பருவத்தில் இருக்கும்  போது , அவர்களிடம் வெளிப்படையாக பேசி வாழ்க்கையை பற்றியும், படிப்பின் அவசியம் பற்றியும்  , அருகிலிருந்து பேச நேரமில்லை. அவர்களுக்கு அதிகமான வேலை இருக்கிறது.என்று காரணம் சொல்லி தப்பிக்கிறார்கள். இது மாற வேண்டும்.
* மனஅழுத்தம் , மோசமான மனநிலை, நான் எதற்கும் பிரயோஜமில்லை, சுய வெறுப்பு போன்றவை  தன்னம்பிக்கை குறைவிற்கு  காரணமாக அமைகின்றன.இதற்கு தினசரி பெற்றோர்கள் பிள்ளைகளிடம்  பேசுவது நல்லது. அவர்களிடம் தயக்கமில்லாமல், கூச்சமில்லாமல் பேசி எது பற்றியும் விவாதிப்பதன்  மூலம்  தயக்கத்தை உடைத்து  பிள்ளைகளுக்கு நம்மிடம் நம்பிக்கை  வளர்க்கலாம்.
*மரணத்தை ஏற்றுக்கொண்டுவிட்டால் , எல்லா பிரச்சினைகளிலிருந்து  விடுபடலாம்  என்று   நினைக்கிறார்கள் . மரணம் தவறான முடிவு.வீட்டிற்கு எந்நவகையில் மாணவர்கள், பிள்ளைகள்  குடும்பத்திற்கு  எவ்வளவு முக்கியமானவர்கள்  என்பதை உணரவைக்க வேண்டும் .
* தன்னோடு ஒன்றாக படித்து சுற்றித்திரிந்த சக மாணவன் தேர்ச்சி பெற்று மேற்படிப்பிற்குச்செல்லும்  போது அதைப் பார்த்து பெற்றோர்கள் சொல்லும் போது தாங்கிக்கொள்ள முடியாத மனநிலையில் இருப்பதால்  பிள்ளைகள் அதற்கு குற்றஉணர்ச்சி அடைந்து விரக்தி அடைகிறார்கள்.இதற்கு ஆறுதல் ஒன்று தான் வழி. மீண்டும் தேர்வெழுத படிக்கும்   காலத்தில் கணிணி போன்ற வேறு சில சிறப்பு பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது என்பதை புரிய வைக்கலாம். படிப்பு சம்மந்தமான விசயங்களை அதில் எப்படி தேடலாம் என்று சொல்லித் தரலாம். 
* மாணவர்களுக்கு அன்றாடம் பிடித்தது பிடிக்காதது பற்றி பெற்றோர்கள் சுதந்திரமாக  பேசவேண்டும்.
* தேர்வு பயம் போன்ற குறிப்பிட்ட  பிரச்சினைகளை  பற்றி பேசி , பயம், அதிக மார்க் வாங்க என்ன  செய்யலாம், பல பெற்றோர்கள் நன்றாக படிக்கும் மாணவர்களுடன் தங்கள்  பிள்ளைகளை   கொண்டுவிட்டு படிப்பில் ஆர்வம் ஏற்படுத்துகின்றனர்.
* நேரம் கிடைக்கும் போது பெற்றோர்கள் டிவிகளில் ஆழ்ந்து விடாமல் பிள்ளைகளுடன் அமர்ந்து படிப்பதற்கு உதவி செய்யலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக