வியாழன், 5 ஏப்ரல், 2012

நூலக அறிவியல்







காலம் காலமாக இருந்து வரும் தகவல் சுரங்கங்களாக நூலகங்கள் திகழ்ந்து வருகின்றன. பொழுதுபோக்காக மட்டுமல்லாது அரிய தகவல்களை அள்ளித் தரும் அங்கமாக இவை விளங்குகின்றன.

அறிவையும் தகவலையும் அனைவருக்கும் எட்டும்படி செய்வது தான் ஒரு நூலகத்தின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. கல்வித் துறை மாபெரும் வளர்ச்சி கண்டு வரும் இந்நாட்களில் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இக் கல்வி நிறுவனங்களின் பலத்தையும் சிறப்பையும் தீர்மானிப்பதில் அங்குள்ள நூலகங்களின் பங்கு முக்கியமானது.

இதனால் சிறப்பான நூலகத்தை அமைக்க கல்வி நிறுவனங்கள் பெரும் முனைப்புடன் ஈடுபடுகின்றன. இதனால் ஒரு நூலகத்தை அமைப்பது, பாதுகாப்பது, நிர்வகிப்பது போன்ற பணிகளில் ஈடுபடக் கூடிய திறனாளர்கள் அதிகம் தேவைப்படுகின்றனர்.

மாணவர்களிடையே புகழ் பெற்று வரும் பல்வேறு துறைகளுக்கு மத்தியில் நூலக அறிவியலும் ஒரு பிரத்யேக துறையாக கடந்த 25 ஆண்டுகளில் எழுச்சி பெற்றுள்ளது. முன்பெல்லாம் நூலகம் என்றால் புத்தகங்களுக்காக என்ற பார்வை மாறி தற்போதைய நவீன நூலகங்கள் புத்தகங்கள், பல்வேறு இதழ்கள், மைக்ரோ பிலிம்கள், வீடியோ கேசட்கள், ஸ்லைடுகள், "சிடி' டி.வி.டி., என பல்வேறு தகவல் ஊடகங்களைக் கொண்டுள்ளன.

நூலக அறிவியல் துறையானது புத்தகங்களை முறைப்படுத்துவது, பராமரிப்பது, பாதுகாப்பது என்னும் 3 முக்கிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது. ஒரு நூலகத்தின் பாதுகாவலராக திகழும் நூலகரானவர் தகவல் பரிமாற்றத்தைப் பலரும் பெற உதவும் முக்கிய அங்கமாக விளங்குகிறார்.

துறை படிப்புகள்
பொதுவாக பிளஸ் 2வுக்கு இணையான படிப்புகளை முடித்தவர்களே இத் துறை படிப்புகளில் சேரலாம். டிப்ளமோ, சான்றிதழ், இளநிலை பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, ஆய்வுப் படிப்பு என பல படிப்புகள் இத் துறையில் தரப்படுகின்றன. பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பட்டப்படிப்பில் சேரலாம்.

ஒரு ஆண்டு படிப்பாகும் இது. இதை முடித்தபின் பட்டமேற்படிப்பில் சேரலாம். எம்.பில்., பி.எச்டி., படிப்புகளையும் இதன் பின் படிக்கலாம்.

பாடத் திட்டம் ஒரு பார்வை
நூலக அறிவியல் படிப்பும் அடிப்படையில் புத்தகங்களுடன் தொடர்புடையதுதான். இதை தேர்ந்தெடுப்பவர்கள் புத்தகங்கள் தொடர்புடைய அனைத்து அம்சங்களுடன் நவீன தகவல் பரிமாற்ற சாதனமான கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தையும் படிக்கிறார்கள்.

Library and Information Systems Management, Bibliography, Documentation, Library Management, Research Methodology, Computer Applications, Information Exchange, Archives Management, Indexing, Library Planning ஆகிய பாடங்கள் பொதுவாக இத் துறையின் பாடப் பகுதியில் இடம் பெறுகின்றன.

வேலை வாய்ப்புகள் எங்கு இதில் படிப்பை முடிப்பவர்கள் பொதுவாக அரசு மற்றும் பொது நூலகங்கள், பல்கலைக்கழகங்கள், பிற கல்வி நிறுவனங்கள், பத்திரிகைத் துறை, மீடியா பிரிவுகள், தனியார் நூலகங்கள், வெளிநாட்டு தூதரகங்கள், புகைப்படம் மற்றும் புகைப்படச் சுருள் நூலகங்கள், தகவல் மையங்கள், டாகுமெண்டேஷன் மையங்கள், அருங்காட்சியகங்கள், காலரிகள், வர்ச்சுவல் லைப்ரரிகள் ஆகியவற்றில் பணி புரியலாம்.

எதிர்காலம் எப்படி
வேகமாக இயந்திரமயமாகி வரும் தகவல் பரிமாற்ற அமைப்புகளின் காரணமாக லைப்ரரியன்கள் நிர்வாக மற்றும் பட்ஜெட்டிங் பொறுப்புகள், நிதி உதவியைப் பெறுவது, ஆய்வு வேண்டுதல்களை முன்மொழிவது, ஆலோசனை வழங்குவது போன்ற புதிது புதிதான பணிகள் இத் துறையில் உருவாகியுள்ளன. எனவே இந்த தகவல் புரட்சி யுகத்தில் நூலகர்கள் இன்றியமையாதவர்களாக எழுச்சி பெற்றுள்ளனர்.

டேட்டாபேஸ் டெவலப்மெண்ட், ரெபரன்ஸ் டூல் மேனேஜ்மென்ட், தகவல் அமைப்பு, என்டர்பிரனரியல் லைப்ரரியன் போன்ற பணிகளும் இவர்களுக்குக் காத்திருக்கின்றன. சாதாரண லைப்ரரியன் என்னும் நிலையில் துவங்கி பிரீலேன்ஸ் இண்டெக்ஸர் என்பது வரை இவர்களின் பணி இன்று வளர்ச்சி கண்டுள்ளது. இது தவிர இன்பர்மேஷன் புரோக்கரிங் என்னும் தகவல்களை வாங்கி விற்கும் புதிய பணியும் இப்போது கிடைக்கிறது.

அனுபவம் பெற்ற துறையினர் நிர்வாகப் பணியையும் பெறலாம். இணைய தளங்களின் பரிணாம வளர்ச்சிக்குப் பின் நூலகர்கள் இன்றியமையாத முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளனர்.

சம்பளம் எப்படி?
தனிநபரின் தகுதி, நூலகத்தின் தன்மை, அளவு, இடம் ஆகியவற்றைப் பொறுத்து சம்பளம் அமைகிறது. நிர்வாகப் பொறுப்பில் உள்ள நூலகர்கள் அதிக சம்பளம் பெறுகிறார்கள். கல்லூரி நூலகர்கள் விரிவுரையாளர்களுக்குச் சமமான சம்பளம் பெறுகிறார்கள். பள்ளிகளில் இது போன்ற நிலை இன்னமும் வரவில்லை. இன்றையச் சூழலில் நூலக அறிவியல் என்பது வளமான வாழ்க்கைக்கு நம்மை எடுத்துச் செல்லும் துறையாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக