வெள்ளி, 20 ஏப்ரல், 2012

பின்னணி குரலில் பின்னி எடுக்கும் யாமினிப் பிரியா!



நாம் பார்க்கும் திரைப்படங்களில், தொலைக்காட்சி தொடர்களில் நடிகர், நடிகை, குழந்தை நட்சத்திரங்கள் எல்லாருமே தங்கள் சொந்தக்குரலில் பேசி நடிப்பதில்லை. அவர்களுக்காக நல்ல குரல் வளமுள்ள டப்பிங்  கலைஞர்குரல்கொடுப்பார்கள்.  டப்பிங் கலைஞர்கள் தங்கள் குரல்வளத்தால் நடிகர்களின் நடிப்பு, உதட்டசைவுக்கு ஏற்ப,குரல் நடிப்பு செய்வார்கள். இந்த டப்பிங் துறையில் 8வயதிலேயே காலடி வைத்து, 60 க்கும் மேலான படங்கள், தொடர்கள், கார்ட்டூன் படங்களில் டப்பிங்கில் அசத்திக்கொண்டிருப்பவர் யாமினி பிரியா!  அவர் சிறுவர் மலர் குட்டீஸ்களுடன் தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார்.
உங்களைப் பற்றி சொல்லுங்களேன்...?
நான் இப்ப 11வது படிக்கிறேன். அம்மா சங்கரி, அப்பா வாசுதேவன். இருவருமே தனியார் வங்கியில் பணிபுரிகிறார்கள். எனக்கு ஒரு செல்லமான தங்கை உண்டு. அவள் பெயர் பாக்யலட்சுமி. அவளும் என்னைப்போலவே டப்பிங் ஆர்ட்டிஸ்டாக இருக்கிறாள்.
டப்பிங் துறைக்கு எப்படி வந்தீங்க?
அது 8 ஆண்டுக்கு முன்பு நடந்த விஷயம்.  குழந்தை டப்பிங் ஆர்ட்டிஸ்ட் தேவைன்னு ஒரு விளம்பரம் வந்தது. அதை பார்த்து நான் விண்ணப்பித்தேன். அதை சீனியர் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஹேமமாலினி கொடுத்திருந்தாங்க. நேரில் போய் பார்த்தேன். அவங்க தான் எனக்கு குருவாக இருந்து 6 மாதம் டப்பிங் கொடுப்பதில் இருக்கும் பல நுட்பங்களை சொல்லிக்கொடுத்தாங்க. அவங்க கற்றுதந்த பாடமும்,நடிகர்.ராதாரவி சார் கொடுத்த ஒத்துழைப்பும் தான் இன்று என்னை ஒரு நல்ல டப்பிங் ஆர்ட்டிஸ்ட் நிலைக்கு கொண்டுவந்திருக்கு.
நீங்க டப்பிங் கொடுத்த படங்கள், சீரியல்கள் பற்றி...?
புதியகீதை, சச்சின், ஜில்லுன்னு ஒரு காதல் இப்படி பல படங்களும்,
குறும்படங்களுக்கும் டப்பிங் கொடுக்கிறேன்.  "தேவிதரிசனம்' "அய்யப்பன்'  "ராஜராஜேஸ்வரி' "வேப்பிலைக்காரி' "மைடியர் பூதம்' இப்படி பல டி.வி.சீரியல்களில் வரும் குழந்தை கதாபாத்திரங்களுக்கு  டப்பிங் குரல் கொடுத்து வருகிறேன்.
டப்பிங்கில் இருப்பதால் படிப்பு எப்படி இருக்கிறது?
நன்றாகதான் படித்து வருகிறேன். முதலில் கொஞ்சம் நேரங்கள் சரிபடாமல் இருந்தது. இப்போது அந்தப் பிரச்னையே இல்லை. எனக்கு கிடைக்கும் நேரத்தில் டப்பிங் கொடுத்துவர சவுகரியமாக இருக்கிறது. அதனால் படிப்புக்கு அது தடையாக இருப்பதில்லை.
நீங்கள் குரல் கொடுத்து, நல்ல பெயர் வாங்கித்தந்த கதாபாத்திரம் எது?
எல்லாக் குழந்தைகளுக்கும் பிடித்த கேரக்டர் டோரா! அந்த டோரா கேரக்டருக்கு நான் டப்பிங் குரல்கொடுத்ததால் குழந்தைகள் மத்தியில் நல்ல பெயரை வாங்கித் தந்தது.
எதிர்காலத்தில் என்னவாக ஆசை?
எடிட்டிங், டப்பிங்கில் விருப்பம் இருக்கிறது. கலாமாஸ்டரிடம் டான்ஸ் கற்றுகிட்டு வருகிறேன். நல்ல ரோல் கிடைத்தால் நடிக்கவும் விரும்புகிறேன்.
 தேவராஜன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக