புதன், 4 ஏப்ரல், 2012

தொல்லியல் படியுங்க...






ஒவ்வொரு பழங்கால நாகரிகத்திற்கும், ஒரு தனி வரலாறு இருக்கிறது. அன்றைய காலங்களில் அவை பதிவு செய்யப்படவில்லை.

தற்போது தொல்லியல் (ஆர்க்கியாலஜி) சார்ந்த படிப்புகள், மீண்டும் பழங்காலத்திற்கு சென்று, சான்றுகளை வெளிப்படுத்த உதவுகிறது. "ஆர்க்கியாலஜி' எனும் சொல் கிரேக்க மொழி வகையைச் சேர்ந்ததாகும். "ஆர்க்கியாஸ்' என்றால் பழங்காலப் பொருட்கள் என்றும், "லோகோஸ்' என்றால் அறிவியல் தத்துவம் என்றும் பொருளாகும்.

இந்திய தொல்லியல் ஆய்வகம்


இந்தியாவின் கலை சார்ந்த பாரம்பரியங்களை பாதுகாப்பதற்காக, "இந்திய தொல்லியல் ஆய்வகம்' எனும் அமைப்பு 1862 ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. பிரிட்டனைச் சேர்ந்த ஜெனரல் அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம், இவ்வமைப்பின் முதல் இயக்குனராக இருந்தார். தொல்லியல் பற்றிய விழிப்புணர்வை இந்தியாவில் ஏற்படுத்தியவர். இந்திய தொல்லியல் ஆய்வுகளின் தந்தை எனவும் அழைக்கப்படுகிறார். தொல்பொருள் ஆராய்ச்சிக்கு ஏற்ப இந்தியா, சுமார் 24 வட்டங்களாக பிரிக்கப்பட்டு செயல்படுகிறது.

தொல்லியல் துறை

பழங்கால மக்களின் நாகரிக வாழ்க்கை முறைகளை அறிய, தொல்லியல் துறை முக்கிய வழிகாட்டியாக உள்ளது. கடந்த கால சமுதாயத்தில் வசித்த மக்களின் நம்பிக்கைகள், சமூக அமைப்பு, பொருளாதார அமைப்பு மற்றும் சுற்றுப்புறச் சூழலின் பலன்கள் உள்ளிட்டவற்றை அறியவும் முடிகிறது.

பணிகள்

இந்தியாவின் தொன்மையை விளக்கும் பழங்கால கட்டடங்கள், நினைவுச்சின்னங்கள் மற்றும் கல்வெட்டுகள் உள்ளிட்டவற்றை பாதுகாப்பதும், பராமரிப்பதும் தொல்லியல் துறையின் முதன்மை பணியாகும்.

தொல்லியல் படிப்புகள்

1. பழங்கால மக்களின் கலாசாரம், பண்புகள், தத்துவ ஞானம், கட்டடக்கலை திறன், செயற்கைப் பொருட்கள் மற்றும் நிலத்தோற்றம் உள்ளிட்டவற்றை ஆராய்ச்சி செய்தலாகும். மேலும், எஞ்சியுள்ள பொருட்களை ஆவணப்படுத்துதல் முக்கியமான ஒன்றாகும். மேற்கண்ட செயல்முறைகளை விஞ்ஞான ரீதியாக மேற்கொள்வதே தொல்லியல் படிப்பாகும்.

2. தொல்லியல் படிப்பானது, புவியியல், வரலாறு, மானுடவியல்,வேதியியல், நிலவியல், கலை மற்றும் இலக்கியம் உள்ளிட்டவையின் கலவையாகும்.

3. சுற்றுப்புற பாதுகாப்பு, நகர அமைப்பு மற்றும் நகர்ப்புற சமூகம் உள்ளிட்ட விசயங்களை முறைப்படியாக மேற்கொள்வதற்கு தொல்லியல் படிப்புகள் அவசியமாகிறது.

தகுதிகள்

1. இளநிலை பழங்கால வரலாறு மற்றும் தொல்லியல் படிப்புக்கு, பிளஸ் 2 தகுதி போதுமானது.

2. டிப்ளமோ/முதுநிலை டிப்ளமோ/ முதுநிலை உள்ளிட்ட தொல்லியல் படிப்புகளுக்கு, இளநிலை படிப்பில் 55 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

தொல்லியல் ஆய்வாளர் (ஆர்க்கியாலஜிஸ்ட்)

தொல்லியல் சார்ந்த கண்டுபிடிப்புகளில் ஈடுபடுபவர்கள் தொல்லியல் ஆய்வாளர் என அழைக்கப்படுகின்றனர். தொல்லியல் ஆய்வாளர்களின் முதன்மை பணியானது களப்பணியாகும். அதாவது கட்டடங்களை தோண்டி எடுத்து குறித்த காலத்திற்குள் வகைப்படுத்தலாகும். மேலும் தோண்டி எடுக்கப்பட்ட கட்டடங்களின் வயது மற்றும் அதன் வரலாறு குறித்து ஆராய்வதும், இவர்களின் பணியாகும்.

கீழ்க்கண்ட இந்திய நிறுவனங்கள் தொல்லியல் படிப்பை வழங்குகின்றன.

1. இந்திய தொல்லியல் ஆய்வகம், புதுடில்லி
2.அலகாபாத் பல்கலைக்கழகம், அலகாபாத்.
3. ஆந்திரா பல்கலைக்கழகம், விசாகப்பட்டினம்.
4.பெங்களூர் பல்கலைக்கழகம், பெங்களூர்.
5. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், வாரணாசி.
6. சென்னை பல்கலைக்கழகம், சென்னை.
7. கொல்கத்தா பல்கலைக்கழகம், கொல்கத்தா.
8. மைசூர் பல்கலைக்கழகம், நாகார்ஜூனா நகர்.
9. மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகம், பரோடா.
10.குசராத் பல்கலைக்கழகம், ஆமதாபாத்.

தொல்லியல் படிப்புக்கு தகுதியானவர்கள் யார்?
கடந்த காலங்களைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் மற்றும் பகுத்தாய்வு செய்யும் திறன் உள்ளிட்ட பண்புகளை பெற்றுள்ளவர்கள் ஆர்க்கியாலஜி துறையை தேர்வு செய்யலாம். தொல்லியல் துறையானது லாபகரமான மற்றும் சவால் நிறைந்ததாக இருக்கும். நம் நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாசாரம் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்கு இப்படிப்பு உதவுகிறது.

வேலைவாய்ப்புகள்
தொல்லியல் படிப்பை வெற்றிக்கரமாக முடித்தவர்களுக்கு, வெளிநாடு மற்றும் உள்நாட்டில் நல்ல வரவேற்பு உள்ளது. கல்லூரியில் ஆசிரியராகவும் மற்றும் ஆய்வுக் கூடங்களிலும் பணிபுரியலாம். அரசு ஏஜன்சிகளிலும் வேலை வாய்ப்பு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக