வெள்ளி, 20 ஏப்ரல், 2012

சுருள் வாளைச் சுழற்றும் அருவி!


வெட்டுக்கத்தி, சுருள்வாள், சுழற்றும் கம்பு என சூறாவளியாய்ச் சுற்றி வருகிறார் தமிழருவி.

சுருள்வாளில் மிக ஆபத்தான இரட்டைச்சுருள்வாளைச்

சுழற்றுவதில் வல்லவர். திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள வெங்கடாம்பட்டியைச் சேர்ந்தவர். இவர் பாளையங்கோட்டை இக்னேஷியஸ் கான்வென்ட் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.

சுருள்வாள் போட்டிகளில் மட்டுமின்றி, சிலம்பம், தேக்வாண்டோ உள்ளிட்ட போட்டிகளிலும் தன்னுடைய தனித்துவத்தை நிரூபித்து வரும் தமிழ்அருவி, விளையாட்டு நுணுக்கங்கள் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டவை..

""என் தந்தை திருமாறன் ஒரு சிலம்ப வீரர் என்பதால், எனக்குச் சிறுவயதிலேயே சிலம்பத்தைக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்துவிட்டார். பாலசுப்பிரமணியன், ஜான்பாவா, அருணாசலம் எனப் பலபேரிடம் பயின்றாலும், சுருள்வாள் வித்தையையும், நுணுக்கங்களையும் திறம்பட கற்றுக்கொண்டது தென்காசி அருகே உள்ள கடபோகத்தி பேச்சிமுத்து என்பவரிடம்தான்.

முதலில் சாதாரண கயிறு, பின் சைக்கிள் டியூப் எனத் தொடங்கி, பின் கூர்மையான சுருள்வாள்களைக் சுழற்றக் கற்றுக் கொண்டேன். தமிழகத்தில் எங்கு போட்டி நடந்தாலும் அங்கு என் பங்களிப்பு இருக்க வேண்டும் எனக் கருதி செல்வதுண்டு.

தமிழகக் காவல்துறை முன்னாள் தலைவர் தேவாரம், திரைப்பட நடிகர் ரஜினிகாந்தின் மூத்த சகோதரர் சத்யநாராயணராவ், புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி ஆகியோர் எங்கள் ஊரில் நடந்த நிகழ்ச்சிக்கு வந்தபோது அவர்கள் முன்னிலையிலும், சென்னை சங்கமம் நிகழ்ச்சியின்போது, தமிழக முதல்வர் முன்னிலையிலும் சுருள்வாளில் எனது தனித்திறமையை வெளிப்படுத்தியுள்ளேன்.

தேக்வாண்டோ கலையில் முதல்நிலை கருப்புப்பட்டை பெற்றுள்ளேன். பல்வேறு அமைப்புகள் சார்பில் சுருள் வாளரசி, கலைமதி, கலைஜீவன், இளம் சாதனையாளர் விருது போன்ற எண்ணற்ற விருதுகள் மற்றும் பட்டங்கள் பெற்றுள்ளேன். தொடர்ந்து பலமணிநேரம் சுருள்வாள்களைச் சுழற்றி, கின்னஸ் சாதனை, லிம்கா சாதனை, குளோபல் ரெக்கார்டு ஆகியவற்றில் இடம்பெற வேண்டும். மேலும் மருத்துவம் படித்து கிராமப்புற ஏழைகளுக்குச் சேவைபுரிய வேண்டும் என்பதே என்னுடைய லட்சியம்'' என்றார் சுருள் வாளை விர்ரென்று சுற்றியபடி, தமிழ்அருவி!
வை.இராமச்சந்திரன் (THANKS TO: DINAMANI.COM)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக