வெள்ளி, 20 ஏப்ரல், 2012

குட்டி வாரியார்



"பிஞ்சில் பழுத்தப்பழம்' என்று பிரகதீஸ்வரனை
சொன்னால் பொருந்தும். 2ம் வகுப்பு படிக்கும் போதே பல பேச்சுப்போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளைப் பெற்றவர். மேடைப் பேச்சுத்திறன் வளர வளர இன்று ஆன்மிக சொற்பொழிவு புரிகிறார். இவரை மக்கள் "குட்டி வாரியார்' என்றே அழைக்கின்றனர்.இவர்,மதுரையில் சிஇஓஏ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த வயதில் எப்படிஆன்மிகம் பற்றி பேச முடிகிறது?
நான் 2ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து பேச்சுப்போட்டிகளில் கலந்து கொண்டு பேசுவேன். மேடைப் பேச்சு பயம் எனக்கு இல்லாததால் மேலும் மேலும் பேச்சுத்திறமையை வளர்த்துக்கொண்டேன். என் தந்தை ஒரு தமிழாசிரியர் என்பதால் வீட்டில் நிறைய புத்தகங்கள் வாங்கி வைத்திருந்தார். அவற்றை எல்லாம் படித்தேன். தாத்தா, பாட்டிகள் சொல்லிய புராணக்கதைகள் பல கேட்டேன். இத்துடன் கடவுளின் அருளும் எனக்கிடைத்திருப்பதாக நினைக்கிறேன். ஒரு முறை கிருபானந்தவாரியாரின் புத்தகத்தைப் படிக்க நேர்ந்தது. அந்தப்புத்தகக்தைப்படித்ததிலிருந்து, கிருபானந்தவாரியார் போல நாமும் பேச வேண்டும் என்று விருப்பபட்டேன். அதனால், அவர் பேசிய சொற்பொழிவுகளை எல்லாம் சிடியில் பலமுறைக்கேட்டேன். இவை எல்லாம் என் சிறியவயதிலேயே நடந்ததால், இந்த வயதில் ஆன்மிக சொற்பொழிவு செய்யமுடிகிறது.
உங்கள் கன்னிப் பேச்சு எங்கே அரங்கேற்றம்?
அப்போது 6ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். மதுரை எல்ஐசி காலனியில் இருக்கும் சக்தி விநாயகர் கோயிலில் மார்கழி மாசம் 30 நாளும் வெவ்வேறு தலைப்புகளில் சொற்பொழிவு செய்தேன்.என் சொற்பொழிவை பலரும் பாராட்டினார்கள். இதனால், பலர் கோயில்களுக்கு என்னை சொற்பொழிவு செய்ய அழைத்தனர். நானும் மறுக்காமல் செய்து வருகிறேன்.
குட்டிவாரியர் என்ற அடைமொழி கிடைத்தது எப்படி?
என் சொற்பொழிவை ரசித்துக்கேட்ட ஒரு மூதாட்டி, என்னிடம் வந்து,"நீ நல்லா பேசுகிறார். அப்படியே கிருபானந்தவாரியர் பேசுவது போல இருக்கிறது. அவர் மறைந்தப்பிறகு, உன் பேச்சில் தான் அவரின் பேச்சு சாயலைக்கண்டேன். என்று பாராட்டி,"நீ வாரியாரின் வாரிசு! இனிமேல் நீதான் குட்டிவாரியார்' என்றார். அவர் வாயாறழைத்த அந்த அடைமொழியே என் பெயருக்கு முன்னதாக அமைந்து விட்டது.
இதுவரை எத்தனை முறை மேடையில் ஆன்மிக சொற்பொழிவு செய்திருக்கிறீர்கள்?
பேசிய மேடைகளையும், ஊர்களையும் அவ்வளவாக நினைவில் வைத்துக்கொள்ளவில்லை. இருந்தாலும் 500 மேடைக்குமேல் சொற்பொழிவு செய்திருப்பேன்.
படிப்பில் எப்படி?
அம்மாவும் அப்பாவும் ஆசிரியர்கள் என்பதால் அவர்களிடம் சந்தேகங்களைக் கேட்டுக்கொள்வேன். 80 சதவீதம் மார்க் எடுத்துவிடுவேன். மற்றபடி படிப்புக்கு எந்தவிதத்திலும் என் சொற்பொழிவு தொந்தரவாக இருந்ததில்லை.
எதிர்கால லட்சியம்?
எம்பிஏ படிக்க வேண்டும் என்பது என் லட்சியமாக இருக்கிறது. படித்து முடித்துவிட்டு ஷேர்மார்க்ககெட் செய்யவேண்டும் என்பது என் எண்ணம். அத்துடன், தொடர்ந்து இந்த ஆன்மிக சொற்பொழிவையும் தொடரவேண்டும் .
வேறு எதில் நாட்டம்?
பொழுது போக்கு என்பது எனக்கு இசையை ரசிப்பது தான். அப்புறம் கம்யூட்டர் மீது ஆர்வம் உண்டு. மிருதங்கம், கிடார், கீபோர்டு, வயலின், வாய்ப்பாட்டு வாசிப்பேன். அடிப்படையில் இருந்து கற்றும் வருகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக