வெள்ளி, 20 ஏப்ரல், 2012

சிலம்பாட்டம்: மாணவி பூஜா மோகன்.

சிலம்பாட்டம் இல்லாத கிராமத்துச் சினிமா அபூர்வம். இது எம்.ஜி.ஆர். காலத்து ஃபார்முலாவாக இருந்தாலும் இப்போதும் மக்களின் ஆர்வத்துக்குத் தீனிபோடும் காட்சிகளாக இருக்கின்றன. ஆண்களின் விளையாட்டாகக் கருதப்படும் இந்தச் சிலம்பத்தைப் பெண்களாலும் விளையாட முடியும் என்பது மட்டுமின்றி தேசிய அளவில் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளார் திண்டுக்கல் புனித வளனார் மெட்ரிக் பள்ளியில் தற்போது பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி பூஜா மோகன்.

சிலம்பம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தது எப்போது?

அப்பா மோகன் கராத்தே மாஸ்டராகவும் சிலம்பம் பயிற்சியாளராகவும் இருப்பதனால் 5 வயது குழந்தையாக இருந்த போதே சிலம்பம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். இதனால் முதல் வகுப்பு மாணவியாக இருந்தபோது நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியில் முதலிடம் கிடைத்தது. தொடர்ந்து மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் முதலிடம் பெற்றேன். வேலூரில் 2005 ம் ஆண்டில் நடைபெற்ற ஐந்தாவது தேசிய அளவிலான போட்டியில் இரண்டாம் இடம் கிடைத்தது. 2009ம் ஆண்டில் வேலூரில் நடைபெற்ற 6வது தேசிய அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் தங்கம் வென்றேன்.  2010ஆம் ஆண்டில் திருவள்ளூரில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் முதலிடம் கிடைத்தது. ஆந்திர பிரதேச மாநிலம் குண்டூரில் கடந்த மே மாதம் நடைபெற்ற எட்டாவது தேசிய அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்றதைத் தொடர்ந்து மலேசியாவில் நடைபெற உள்ள சர்வதேச போட்டியில் விளையாடுவதற்கான தகுதி கிடைத்துள்ளது.

சிலம்பாட்டத்தில் எத்தனை வகைகள் உள்ளன?

அலங்காரச் சிலம்பம், போர் சிலம்பம், குறவஞ்சி சிலம்பம், பனையேறி மல்லு, துலுக்கானா, நாகதாளி, நாகசீறல், கள்ளன்கம்பு எனப் பலவகைகள் உள்ளன. அலங்காரச் சிலம்பம் என்பது அரசர் காலத்தில் திருவிழாக்கள் மற்றும் கேளிக்கைகளுக்காக விளையாடப்படுவது. போர் சிலம்பம் வன விலங்குகள் மற்றும், எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக ஆடப்படுவது. இதைத் தவிர ஒவ்வொரு வட்டாரத்திலும் விளையாடப்படும் வகைகளைக் கொண்டு குறவஞ்சி, பனையேறி மல்லு எனப் பெயர் வந்தது.

சிலம்பம் கற்பதனால் என்ன பயன்?

கம்பு எடுத்து சுழற்றும்போது உடம்பில் உள்ள ஒவ்வொரு நாடி நரம்பும், தசைகளும் இயக்கப்படுகின்றன. குறிப்பிட்ட உடல் பயிற்சியை ஒருவர் குறிப்பிட்ட வயது வரை மட்டுமே மேற்கொள்ள முடியும். ஆனால் சிலம்பாட்டம் கற்றவர் 85, 90 வயதானாலும் விளையாடுவதால் இறுதி வரை அவர் உடல் பயிற்சி செய்பவராக ஆகிறார். இதைத் தவிர சிலம்பம் ஒரு தற்காப்பு கலை. கம்பை எட்டு திசைகளிலும் சுழட்டும்போது நமது உடம்பைச் சுற்றி ஒரு வேலியை உருவாக்கிட முடியும். ஒரே ஓர் ஆயுதத்தைக் கொண்டு வேலி அமைப்பது என்றால் அது சிலம்பத்தினால் மட்டுமே முடியும். இது போன்ற வேலிக்குள் வேறு ஆயுதங்களைக் கொண்டு யார் தாக்க முற்பட்டாலும் அதனை சுழற்றும் கம்பால் தடுத்திட முடியும்.

மற்ற விளையாட்டுக்களைப் போல இந்த விளையாட்டுக்கும் அரசு சலுகை உள்ளதா?

தற்போது மாநில அளவில் பள்ளிகளில் புதிய விளையாட்டு எனச் சிலம்பம் சேர்க்கப்பட்டுள்ளது. உயர்நிலைக் கல்வி சேர்க்கையிலும் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளிலும் 5 சதவீதம் இடஒதுக்கீடு இந்த விளையாட்டுக்கு வழங்கப்படுகிறது.

கண்ணகியின் கால் சிலம்பால் மதுரை நகர் அழிந்ததாகக் காப்பியங்கள் கூறுகின்றன. கால் சிலம்புக்கு உள்ள வலிமையைவிட கை சிலம்புக்கு அதிக வலிமை உள்ளது என்பதை நிரூபிக்கும் போட்டியாக மலேசியாவில் நடைபெற உள்ள சர்வதேச போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.

 வி.ரவிச்சந்திரன் (THANKS TO: DINAMANI.COM)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக