வியாழன், 5 ஏப்ரல், 2012

கமர்ஷியல் பைன் ஆர்ட்ஸ்





அழகியலோடு கூடிய வர்த்தக ரீதியிலான நுண்கலை என்பது ஒரு துறையாகவே வெகுநாட்களுக்குக் கருதப்படவில்லை. ஆனால் அழகுணர்ச்சியுடன் கூடியதாக ஒன்றை உருவாக்குவது என்பது பெரும் நிறைவையும் பொருளாதார ரீதியிலான சாத்தியங்களைக் கொண்டிருக்கிறது என்பது சமீப காலமாகத் தான் உணரப்படுகிறது.

சித்திரம் வரைவது, பெயிண்டிங், சிற்பக்கலை போன்றவை நுண் கலையாகக் கருதப்படுகின்றன. உலகை அழகுமயமாக்குவதன் மூலமாக இத் துறையினர் புகழ் பெறுகின்றனர். நுண்கலையின் பிரிவுகள் தொடர்ந்து விரிவடைந்து கொண்டே வருகின்றன.

அசல் பெயிண்டிங் மற்றும் சிற்பக்கலைக்கான வாய்ப்புகள் குறைவாகவே அறியப்படுவதால் பிற பிரிவுகளில் தங்களது திறன்களை வளர்த்திடுவதில் பெரும்பாடுபடுகின்றனர்.

வர்த்தக ரீதியாக பயன்படும் விளம்பர வடிவமைப்பு, பில்போர்ட்கள், புத்தக அட்டைகள், விண்டோ டிஸ்பிளே, சினிமா ஸ்லைட்கள், தொழில் ரீதியான அச்சுப் பிரதிகள், பேக்கேஜிங் போன்றவற்றை உள்ளடக்கி வர்த்தகக் கலை புகழ் பெற்று வரும் புதிய துறையாக உருவாகிவருகிறது. இத்துறையில் இணைய விரும்புபவர்கள் கலா ரசனையுடன் இருப்பதோடு விளம்பரம் மற்றும் வணிகத்திலும் ஈடுபடுத்திக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.

இத்துறை வெகுவேகமாக விரிவுபட்டு வருவதோடு எண்ணற்ற வாய்ப்புகளையும் தருகிறது. எதையும் மேலும் அழகுபடுத்துவதே இத்துறையினரின் முக்கியப் பணியாகும். புத்தகங்கள், "சிடி'.,க்கள் போன்றவற்றின் அட்டைகளில் வெளியாகும் படம், வடிவமைப்பு போன்றவற்றிற்கும் தற்போது காப்புரிமை வாங்கப்படுவதிலிருந்து கலையின் மரியாதை என்னவென்று அறியலாம்.

என்ன தேவை?
இத்துறையில் இணைய சில அடிப்படை குணநலன்கள் தேவைப்படுகின்றன. கலையின் மீது இயற்கையான ஈடுபாடு இருப்பதுடன் முறையான பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும். இத் துறையின் நிபுணர்களுடன் பரிச்சயம் இருப்பது துறையின் எதிர்பார்ப்பை அறிந்து கொள்ள உதவும்.

இதன் மூலமாகவே நம்மிடம் எதிர்பாக்கப்படுவது என்ன என்பதையும் வர்த்தக உலகிற்கு எதை எப்படித் தரவேண்டும் என்பதையும் அறியலாம். உலகமே தற்போது அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியைக் கண்டு வருவதால் இல்லஸ்டிரேஷன், கிராபிக் டிசைன், ஆர்ட் டைரக்டிங் போன்ற திறமைகளும் தேவைப்படுகின்றன. தற்போது கலையும் தொழில்நுட்பமும் இணைந்து செயல்பட வேண்டிய தேவை உள்ளது. இத்துறையில் சுய ஊக்க சக்தி, சுய சிந்தனை வடிவங்கள், கற்பனைத் திறன் போன்றவை தேவைப்படுகின்றன. தவிர பிரிண்டிங் புரடக்ஷன், கிராபிக் ஆர்ட்ஸ் திறமைகளும் கூடுதலாகத் தேவைப்படுகின்றன.

எதிர்காலம் எப்படி?
இத் துறையில் பரந்து விரிந்துபட்ட உட்பிரிவுகள் உள்ளன. ஆர்ட் ஸ்டுடியோ, விளம்பர நிறுவனங்கள், புத்தக வெளியீட்டு நிறுவனங்கள், நாகரீக நிறுவனங்கள் என்று பல உள் துறைகளில் பணி வாய்ப்புகள் கிடைக்கின்றன. பிரீலான்ஸ் பணி வாய்ப்புகளும் உள்ளன. இத்துறையுடன் இணைந்து டைரக்ஷன், போட்டோகிராபி, ஆசிரியர், தொலைக்காட்சி, ஆடை வடிவமைப்பு மற்றும் பேஷன் இதழ்களில் ஆர்ட் டைரக்டர், ஆன்லைன் சேவை, சாப்ட்வேர் நிறுவனங்கள், புத்தக வெளியீட்டாளர்கள், உற்பத்தியாளர்கள், விளம்பரம், பொருள் வடிவமைப்பு போன்றவற்றில் நல்ல வேலை வாய்ப்புகள் உள்ளன. இவை தவிர இவர்களுக்கு அருங்காட்சியகங்கள், சேவை நிறுவனங்கள், சர்ச்சுகள், டிபார்ட்மெண்டல் ஸ்டோர்கள், கல்லூரிகள், சட்ட நிறுவனங்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள், கம்ப்யூட்டர் நிறுவனங்கள், வடிவமைப்பு நிறுவனங்கள், திரைப்பட நிறுவனங்கள் போன்றவற்றிலும் நல்ல வாய்ப்புகள் உள்ளன.

ஊதியம் எப்படி?
உட்பிரிவுகளைப் பொறுத்து இத் துறையில் ஊதியம் மாறுபடுகிறது. நமது தகுதி, எங்கு பணி புரிகிறோம், எந்த நிலையில் பணி புரிகிறோம் என்பதைப் பொறுத்தும் இத் துறை ஊதியங்கள் மாறுபடுகின்றன. ஆரம்பத்தில் மாதம் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை சம்பாதிக்க முடியும் என்ற போதும் அனுபவ அடிப்படையில் கிரியேடிவ் டைரக்டர், டாப் டிசைனர், ஆர்ட் டைரக்டர் என்று வரும்போது மாதம் லட்ச ரூபாய் வரை கூட சம்பாதிக்கலாம் நல்ல திறமையுடன் தானாக தொழில் துவங்கும்போது இந்த இலக்குகளையும் கடந்து சம்பாதிக்க ஏராளமாக வாய்ப்புகள் உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக